×

குளத்தூர் பகுதியில் மழை இல்லாததால் பனைத்தொழில் மந்தம்

குளத்தூர், ஜூன் 12: குளத்தூர் பகுதியில் மழை இல்லாததால் பனைத்தொழில் மந்தமாக உள்ளது. இதனால் பனைத்தொழிலாளர்கள் கவலையடைந்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பனைத் தொழிலாளர்கள், தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் பகுதியில் உள்ள பனைகளை கட்டு குத்தகைக்கு எடுத்து தொழில் செய்து வருகின்றனர். ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் இப்பகுதியில் பனைத் தொழில் விறு விறுப்படையும். கடந்த வருடம் பருவமழை பொய்த்ததால் கடந்த இருமாதங்களாக ஏராளமான பனைகள் கடும் வெயிலில் காய்ந்து போனது. இதனால் பனைகளில் பாலை சுரக்காமல் வெறும் பனையாக காட்சியளிக்கிறது. சாயல்குடி பகுதியில் முற்றிலும் பனைத்தொழில் இல்லாமல் போன நிலையில் குளத்தூர் பகுதியிலாவது பனையில் பாலை சுரக்கும் என நம்பிவந்த பனைத் தொழிலாளர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். மேலும் குறைந்த அளவே கிடைக்கும் பதநீரை கருப்பட்டியாக காய்ச்சுவதை விட சாலையோரம் நின்று விற்று விடலாம் என குடங்களில் பதநீரை வைத்து கொண்டு கிழக்கு கடற்கரை சாலையில் வரும் வாகன ஓட்டிகளிடம் ஒரு செம்பு ரூ30முதல் ரூ60வரை விற்பனை செய்கின்றனர்.

இது குறித்து சாயல்குடி நரிப்பையூரை சேர்ந்த பனைத்தொழிலாளி சின்ன இசக்கிமுத்து கூறுகையில், ‘‘நான் 8வயது முதலே பனைத்தொழிலில் ஈடுபட்டு வருகிறேன். அப்போது பனைத்தொழில் நன்றாக இருக்கும். பதநீரில் காய்ச்சும் கருப்பட்டிக்கு விலை இருக்காது. இதனால் பெரும்பாலான பனைத்தொழிலாளர்கள் இத்தொழிலை விட்டு விட்டு மதுரை, சென்னை என பல்வேறு பகுதிகளுக்கு வேறு தொழில் தேடி சென்று விட்டனர்.  தற்போது விரல் விட்டு எண்ணும் வகையில்சில தொழிலாளர்கள் மட்டுமே இத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.  நான் பனைத் தொழிலில் ஈடுபட்டு 40 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. இதுவரை 4முறை பனையில் இருந்து தவறிவிழந்து உயிர் பிழைத்துள்ளேன். இத்தொழிலை தவிர எங்களுக்கு வேறு தொழில் தெரியாது. கடந்த சில வருடங்களாக பருவ மழை குறைந்து கொண்டே வருவதால் பனைகளும் கருகி போவதோடு பனைமரங்கள் எண்ணிக்கையும் குறைந்து போனது. தற்போது சாயல்குடி பகுதியில் உள்ள பனைகளில் முற்றிலும் பாலை சுறக்காததால் அப்பகுதியில் பனைத்தொழில் அடியோடு முடங்கிபோய் உள்ளது. இதனால் குளத்தூர் பகுதியில் உள்ள பனைகளில் ஓரளவு பாலை சுறக்கும் என்ற நம்பிக்கையில் இப்பகுதிக்கு வந்தோம். ஆனால் எதிர்பார்த்த அளவு பனைகளில் பாலை சுறக்கவில்லை. மே ஏப்ரல் மாதம் பாதிக்கு மேல் விறுவிறுப்படையும் பனைத்தொழில் ஆகஸ்ட் மாதம் வரை பனையில் இருந்து பதநீர் இறக்குவோம் ஆனால் இந்தவருடம் ஜூன் பாதிக்குமேல் பனையில் பதநீர் சுறப்பது கடினம் தான்.

மேலும் பனைத்தொழில் நாளுக்கு நாள் மோசமாகி கொண்டே போவதால் பனைத்தொழிலாளர்களுக்கு அரசு நிவாரண தொகை  அல்லது கடன் உதவி தொகை வழங்க வேண்டும். மேலும் வீதிக்கு வீதி டாஸ்மாக் கடை திறக்கும் அரசு பனைத்தொழிலாளர்கள் பனையில் கள் இறக்க அனுமதித்தால் பனைத்தொழிலாளர்களின் வாழ்வாதாரம் உயரும்’’ என்றார்.

Tags : area ,Kulathoor ,
× RELATED அருமனை அருகே மின்கசிவு ஏற்பட்டு வீடு தீப்பிடித்து எரிந்தது